வடக்கு பட்டி, தெற்கு பட்டி என இரண்டு கிராமங்கள். இதில் தெற்கு பட்டி கிராமத்தில் நாயகன் விஜய் ஆர்.நாகராஜும், வடக்கு பட்டி கிராமத்தில் நாயகி பிரியா மேனனும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரண்டு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்களுக்குள் பெரும் பகை இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜய்யும், பிரியாவும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் விஷயம் ஊர் முழுக்க தெரியவருகிறது. இதனால், இரண்டு ஊர் மக்களும் இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட கிராமத்தின் நடுவில் சிங்கம்புலியின் வீடு உள்ளது. இவருடைய வீடு, பாதி தெற்கு பட்டியை சார்ந்தும், பாதி வடக்கு பட்டியை சார்ந்தும் உள்ளது. இவர் எங்கு சென்றாலும் சொம்பை திருடுவது வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

விஜய், பிரியா காதல் விஷயத்தை அறிந்த சிங்கம்புலி, இவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். மேலும் இவர்கள் காதல் மூலம் கிராமத்து பகையை போக்கவும் நினைக்கிறார்.

இறுதியில் சிங்கம்புலி, காதல் ஜோடியை சேர்த்து வைத்தாரா? ஊர் பகையை போக்கினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆர்.நாகராஜும், நாயகியாக நடித்திருக்கும் பிரியா மேனன் இருவரும் புதுமுகம் என்பதால் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

ஊர் பஞ்சாயத்து தலைவர்களாக நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியை டைட்டில் நாயகனாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள். சிங்கம்புலியும் தன்னால் முடிந்தளவிற்கு காமெடியாக படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார்.ஆனால் இவருடைய காமெடி பெரியதாக எடுபடவில்லை. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே சிறிதளவு சிரிக்க வைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுவாமி ராஜா. ஆனால், காமெடியை ரசிக்கதான் முடியவில்லை.

முக்கியமான காட்சிகளை வெளியில் சொல்ல முடியாதளவிற்கு படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நெருடலாக இருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம்.ஆதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கிச்சாஸ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை’ சுவாரஸ்யம் குறைவு.

NO COMMENTS

LEAVE A REPLY