திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்று பொருள். நடந்த திருமணம் ஏதோ சாதாரண திருமணம் அல்ல. சுந்தரேசுவரர் என்ற சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடந்த திருமணம். கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவரோ சாட்சாத் மகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் – பார்வதியும், விஷ்ணுவும் – லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள்.

இப்படிப் பெருமை பெற்ற தலம் திருமணஞ்சேரி. கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால். இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி.

பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள்.பார்வதி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவனை மணந்துகொண்டார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார். நான்முகனே புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் இத்திருமணக் காட்சியை ஒரு தூணில் அற்புத சிற்பமாகக் காணலாம். அங்கே திருமணத்தை உடனிருந்து நடத்தி வைத்தவர் திருமாலிருஞ்சோலை அழகர்.

திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் லட்சுமி நாராயணர். இரு தேவியர்கள் ஸ்ரீதேவி, பூதேவி. உற்ஸவரது பெயர் வரதராஜப் பெருமாள்.

சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது. கல்யாண சுந்தரேசுவரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான். அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாளின் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.

வழக்கத்திற்கு மாறாக, இந்த ஊரில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. திருமணத்திற்காகக் கல்யாணசுந்தரரும் கோகிலாம்பாளும் கிழக்கு நோக்கி அமர்ந்ததால், நடத்தி வைத்த மைத்துனர் மேற்கே பார்த்து அமர்ந்தாராம். இங்கே அவர் லட்சுமியைப் பக்கத்திலோ அல்லது தன் திருமார்பிலோ தாங்கவில்லை. தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலம். சோழ வளநாட்டில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் திருப்பார்த்தன் பள்ளி பிரசித்தமானது. திருமணஞ்சேரி திருப்பார்த்தன் பள்ளியின் அபிமானஸ்தலம்.

தும்பிக்கையாழ்

வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், ராமானுஜர் சந்நிதிகள் உண்டு. சென்ற ஆண்டு தன்வந்திரி பகவானுக்கு தனியே ஒரு சந்நிதி அமைக்கப்பட்டது.

திருமணஞ்சேரி பல்வகைப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. லட்சுமி நாராயணர் கேட்டதைக் கொடுக்கும் வரதராஜனுமாவார். ஸ்ரீதேவி – பூதேவி சமேதரான இப்பெருமாளை வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். தன்வந்திரியை ஹஸ்த நட்சத்திரம், புதன் கிழமைகளில் மூலிகைத் தைலாபிஷேகம் செய்வதும், நெய் தீபமேற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்யத்தை அளிக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபமேற்றி வழிபட வேண்டும்.

இப்படி சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரியில் பொதுமக்கள் உபயத்தில்தான் கோயில் பராமரிக்கப்படுகிறது. உற்ஸவ மூர்த்திகளின் சிலைகள் முதலியன பாதுகாப்புக்காக சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைவிடம்: திருமணஞ்சேரி, கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தொலைவு.

NO COMMENTS

LEAVE A REPLY