முருகனின் ஆறுபடை வீடுகள்

    0
    1132

    தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    இடங்கள்

    1.திருப்பரங்குன்றம்
    2.திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்
    3.திருவாவினன்குடி (எ) பழனி
    4.திருவேரகம் (எ) சுவாமிமலை
    5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
    6.பழமுதிர்சோலை

    முதற்படை வீடு திருப்பரங்குன்றம்:
    முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. வைகாசி விசாகம் இங்கு பெரு விழாவாக கொண்டாடப்பெறுகின்றது.

    சிவபெருமானும், பார்வதி தேவியாரும் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இரண்டாம்படை வீடு திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது

    கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் ”அலைவாய்” என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர்.

    போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம். இத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.
    மூன்றாம்படை வீடு திருவாவினன்குடி, பழனி
    திருவாவினன்குடி முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
    இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

    நான்காம்படை வீடு சுவாமிமலை :

    சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இங்கு முருகன் சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று. இது கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
    ஐந்தாம்படை வீடு திருத்தணி :
    திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு.
    இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.

    ஆறாவதுபடை வீடு பழமுதிர்சோலை:

    பழமுதிர்சோலை முருகனின் ஆறாவது படைவீடு ஆகும். இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது.
    குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    NO COMMENTS

    LEAVE A REPLY