பென்சில் – திரை விமர்சனம்

0
187

டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இவர்களுடன் ஷாரிக் ஹசன் என்னும் மாணவன் படித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின் மகன். ஒரு மாணவன் பள்ளியில் என்ன செய்ய கூடாதோ, அதையெல்லாம் ஷாரிக் செய்து வருகிறார்.

மேலும் ஆசிரியர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரிடம் பிரச்சனையும் செய்கிறார். ஷாரிக் இந்த பள்ளியில் படிப்பது பெருமை என்பதால் நிர்வாகம், இவர் செய்யும் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த நிலையில், பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்குவதற்காக ஊர்வசி வருகிறார். அப்போது பள்ளியை சோதனை செய்யும் போது, மர்மமான முறையில் ஷாரிக் இறந்து கிடக்கிறார். இதனால் பள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ், ஷாரிக்கை கொலை செய்திருக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் சந்தேகப்படுகிறது. இறுதியில் ஷாரிக்கை கொலை செய்தது யார்? ஜி.வி.பிரகாஷ் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இது முதல் படம். ஆனால் தற்போது தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. மாணவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா மாணவி உடையில் அழகாக இருக்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலாக நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஷாரிக் ஹசன், பார்ப்பவர்கள் கோபம் அடையும் அளவிற்கு வலுவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய வில்லத்தனம் ரசிக்க வைத்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களான டி.பி.கஜேந்திரன், வி டிவி கணேஷ், அபிஷேக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பள்ளியில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் மணி நாகராஜ். எது எல்லாம் படத்தில் நடக்கக் கூடாதோ அதையெல்லாம் காண்பித்து பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறார்.

குறிப்பாக, ஆசிரியர்களின் ஆபாச வீடியோ, சிறுமியை நீச்சல் குளத்தில் தள்ளிக் கொலை செய்வது உள்ளிட்ட காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

இறுதிக் காட்சியில் தனியார் பள்ளிகள் கல்வியை விற்பது தவறு என்றும், தங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பது தவறு என்றும் அப்பட்டமாக சொல்லியிருப்பது சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியும் ரசிக்க முடிகிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பென்சில்’ ஆபத்தான கூர்மை.

NO COMMENTS

LEAVE A REPLY