காலங்கி சித்தர்

0
168

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

“”ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,” என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

“”அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?” என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

“”குருவே! நான் தான் காலாங்கி,” என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “”அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,” என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே “இளம் பிள்ளை’. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை “காலாங்கி சித்தர்’ என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து “சித்தேஸ்வரர்” என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

திருவிழா : அமாவாசை, பவுர்ணமி
சிறப்பு : சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.

மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. “ஞானசற்குரு பால முருகன்’ என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.

*********************************************************************

காற்றையே உடலாகக்  கொண்டவர் என்றும் காலனைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால் நெருங்க முடியாதவர் என்றும் காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு. காலங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர் இவரைப் பற்றிக்  கூறியுள்ளார். யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்கள் பலவுண்டு.

திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும், புயலும் வெள்ளமும் கரை புரள பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள், யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பக்  காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டேபோனார்.காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கியே சென்று கொண்டிருந்த காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!…எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர்.

“சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரேஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார். அங்கு ஒரு பயங்கரமான புலி படுத்துக்கிடப்பதைக்  கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது.

காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர்.  மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனிதமுகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்குதவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி. காலங்கி நாதர் அவரை வணங்கி உபதேசம் பெற்றார்.

பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும் திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி ஆசி பெற்றார்.சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களயும் சந்தித்து அவர்களின் பேரருளைப்  பெற்றார்.

அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான். தான் அவரைப் பார்க்க வந்த நோக்கத்தைக் கூறினான். சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக்கிணறு உண்டு.உலோகத்தைத்  தங்கமாக மாற்றும் தைல மூலிகைக்  கிணறு.சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில் இறைபக்தியும்,திருப்பணி கைங்கர்யங்கங்களில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியைத்  தொடந்தான்.ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள் பொருள் பற்றாக் குறையால் பணியைத்  தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவி புரியவில்லை.

சதுரகிரியில் தவம் புரிந்து கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான்.நடந்தவற்றைக் கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி நின்றான்.ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை, உதிர வேங்கை,ஜோதி விருட்சம்,கருநெல்லி முதலியவற்றாலும்,முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார்.

அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களைத் தங்கம் உண்டாக்கினார்.’வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து கோயிலைக்  கட்டி முடி போஎன்றார். காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற  வணிகன் வாமதேவன் தன் விருப்பப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான். அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்  கொண்டு மூடிவிட்டார். துஷ்டர்கள், பேராசைக்காரர்,வீணர்களிடம் போய்ச்  சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,நான்கு திசைகளுக்கும் வாரகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களைக்  காவலுக்கு  நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY