நன்மக்கட்பேறு பெற திருவெண்காடு

  0
  201
  சிவஸ்தலம் பெயர் திருவெண்காடு
  இறைவன் பெயர் சுவேதாரன்யேஸ்வரர்
  இறைவி பெயர் பிரம்மவித்யா நாயகி
  பதிகம் திருநாவுக்கரசர் – 2
  திருஞானசம்பந்தர் – 3
  சுந்தரர் – 1
  எப்படிப் போவது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.
  ஆலய முகவரி அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோவில்
  திருவெண்காடு
  திருவெண்காடு அஞ்சல்
  சீர்காழி வட்டம்
  நாகப்பட்டினம் மாவட்டம்
  PIN – 609114இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
  காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3.திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன.
  இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன.சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர்.
  இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது.

   

  இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியதனால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தர ரிஷபதேவர் அசுரனுடன் தேவர்களைக் காப்பாற்ற போரிட்டார். மருத்துவாசுரன் ரிஷபதேவர் மீது மாயச் சூலத்தை ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதையறிந்த இறைவன் சிவபெருமான் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான். அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம்.

  இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

  இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று – சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி
  இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று – பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
  இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று – சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி
  இத்தலத்தில் உள்ள தலவிருட்சங்கள் மூன்று – வடவால், வில்வம், கொன்றை.

  இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.

  ஆதி சிதம்பரம்: திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று போற்றப்படுகிறது. நடராசசபை சிதம்பரத்தில் உள்ளது போன்றே செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கும் சிதம்பரத்தில் நடப்பது போன்று நாடொறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரகசியமும் இங்குள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.

  நவக்கிரஹ ஸ்தலம்: திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும். அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும்.இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.

  நன்மக்கட்பேறு பெற: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் 2வது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.

  பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
   ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
  வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
   தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
  

  63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெணகாட்டுநங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு. இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY