‘இது நம்ம ஆளு’ திரை விமர்சனம்

0
161

சிம்பு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரரான சூரி எந்த வேலை வெட்டியும் இல்லாமல் சிம்புவுக்கு பைக் டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுக்கு நயன்தாராவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

அதன்படி, நயன்தாராவை பெண் பார்ப்பதற்காக திருவாரூர் செல்கிறார்கள். பின்னர், நயன்தாராவிடம் பேசும் சிம்பு, தான் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பின்னர் ஒருசில பிரச்சினைகளால் அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

இதற்கு நயன்தாரா எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார். அவருக்கு தன்னை பிடித்திருக்கிறதா? என்று தெரியாமலேயே சிம்பு குழப்பத்தில் இருக்கிறார்.

இருப்பினும், இருவரும் நீண்டநாள் காதலர்கள் போல் நெடுநேரம் போனிலேயே பேசிக் கொள்கிறார்கள். இதற்கிடையில், இவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஒருநாள் நயன்தாராவின் அப்பா உதய் மகேஷும், சிம்புவின் அப்பா ஜெயப்பிரகாஷும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது உதய் மகேஷ் கல்யாணத்துக்கு முன்பே தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுடனான காதல் முறிந்துவிட்டதாகவும், அவள் நினைவாகவே அவளது பெயரை தனது பெண்ணுக்கு வைத்திருப்பதாகவும் ஜெயப்பிரகாஷிடம் கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கும் ஜெயப்பிரகாஷ், அதை, அப்படியே நயன்தாராவின் அம்மாவிடம் சென்று கூறிவிடுகிறார்.

இதனால் கோபமடையும் நயன்தாராவின் அம்மா, உதய் மகேஷை பயங்கரமாக திட்டிவிடுகிறார். தனக்கு இந்தமாதிரியான ஒரு அவமானத்தை ஏற்படுத்திவிட்ட ஜெயப்பிரகாஷை பதிலுக்கு தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துகிறார் உதய் மகேஷ். இதனால் இவர்கள் இருவரின் குடும்பத்துக்குள்ளும் பிரச்சினை ஏற்படுகிறது.

இறுதியில், சிம்பு-நயன்தாராவுக்குள்ளும் இதே பிரச்சினை எழுந்து, இறுதியில் பிரிய நேரிடுகிறது. இவர்களது திருமணமும் நின்றுவிடுகிறது. இதன்பிறகு, இவர்கள் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினை தீர்ந்து கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

ஐடி கம்பெனியில் மேனேஜராக வரும் சிம்பு, ரொம்பவும் மெனக்கெடாமல் சிம்பிளான டயலாக், சிம்பிளான நடிப்பு என அசத்தியிருக்கிறார். காதல் பற்றி ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகள் இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.

வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் என இல்லாமல், ஒரு பெண்ணிடம் அடங்கிப் போகும் வாலிபராக இந்த படத்தில் நடித்து கைத்தட்டல் பெறுகிறார்.

நயன்தாரா ஒரு அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும் எளிதாக பதிகிறார். ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை ஆக்ரோஷமாக காட்டினாலும் பின்னர் காதலுக்குள் சிக்கியவுடன் உருகி உருகி காதலிக்கிற சாதாரண பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

சிம்புவும், நயன்தாராவும் பேசும் காட்சிகள் திரையில் நீண்டநேரமாக வந்தாலும் படத்தை கலகலப்பாக கொண்டுபோவது சூரியின் காமெடிதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையில் சூரி கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் எல்லாமே கலகலப்பு. படம் முழுக்க சிம்புகூடவே பயணமாகியிருக்கும் சூரிக்கு இந்த படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிஐடியாக வரும் சந்தானம் ஒரு சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா பிளாஷ்பேக் காட்சியிலே வந்தாலும் அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சிம்பு – ஆண்ட்ரியா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. மற்றபடி, ஜெயப்பிரகாஷ், மதுசூதனன், உதய் மகேஷ், அர்ஜுனன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

சின்ன பசங்களை வைத்து படம் எடுத்துவந்த பாண்டிராஜ் ஒரு புதுமுயற்சியாக முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் விதத்தில் ஒரு காதல் படத்தை எடுக்க முன் வந்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான்.

சிம்புவும்-நயன்தாராவும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நிஜக்காதலர்கள் இயல்பாக எப்படி பேசிக்கொள்வார்களோ அதேமாதிரி அமைத்திருப்பது சிறப்பு.

இவர்கள் பேசிக்கொள்வதை நீண்ட காட்சிகளாக வைத்திருப்பது சற்று போரடித்தாலும், இடையிடையே சூரியின் காமெடியை புகுத்தி படம் பார்ப்பதற்கு தடை ஏற்படாதவாறு கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக பாண்டிராஜை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம்.

குறளரசன் படத்தின் மற்றொரு ஹீரோ என்றுகூட சொல்லலாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை இந்த படத்தில் அமைத்துள்ள பின்னணி இசையின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், அதை காட்சிப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் தோன்றுகிறது. சிம்பு-அதா சர்மாவும் இணைந்து ஆடும் பாடல் தியேட்டரில் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறது.

அதேபோல், பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் இவரது கேமரா மிகவும் தெளிவாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளுதான்.

NO COMMENTS

LEAVE A REPLY