ஆயுள் விருத்தி தரும் அனுமான்!

  0
  280

   

  மார்கழித் திங்கள் மதிமறைந்த நந்நாள்-மூல நட்சத்திர கூடிய சுபயோக சுபதினத்தில், கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக விளங்கும் அனுமான் அவதரித்தார். அன்புக்கும் தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் உத்தம பிரபு-ஈரேழு பதினான்கு லோகங்களிலும் வியாபிப்பவர்.

  சொர்ண குண்டலங்கள் அணி செய்ய ஸ்படிகம் போன்ற திருமேனியில் மௌஞ்சி யக்ஞோபவீதம் விளங்க-உதாரமான புஜபலத்துடனும் அபாரமான சக்தியோடும் காட்சி தரும் வாயு புத்திரனைப் பிரார்த்திப்போர்க்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் விருத்தியாகும்.

  வலது திருக்கரத்தில் கதையைத் தாங்கி அணி மார்பில் சீதா ராமரைத் தாங்கித் திருத்தோற்றம் தரும் சிரஞ்சீவி ஸ்ரீ ராமபக்த அனுமானை ஆராதிப்பவருக்கு அவர் அபயவரத ஹஸ்தம் அளித்து என்றென்றும் ஆனந்தம் பொங்க அருள் புரிகிறார்.

  நவவியாகரண பண்டிதரும், சர்வ மந்திர தந்திரயந்திர சொரூபியுமாக நம்மோடு எழுந்தருளி, என்றும் சீரஞ்சீவியாக வாழ்ந்துவரும் அனுமான் தமது அன்பு பக்தர்களைக் காத்து ரட்சிக்க சதாசர்வ காலமும் சித்தமாயிருக்கிறார். ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபுவின் ஜயந்தி, ஜயந்திகளுக்கெல்லாம் ஜயந்தி, அந்த ஜயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு கசல மங்களங்களும் உண்டாகும்.

  நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பம்பலம் ஆகிய அறுவகைப் பலங்களையும் நாம் நிரந்தரமாகப் பெறுவதற்கு `சிறிய திருவடி’ என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மகாப்புரபுவின் சீரிய திருவடியை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்

  ஸ்ரீராமபிரானின் அருளாணைப்படி சேது சமுத்திரக்கரையில் அமர்ந்து ராம தியானம் செய்துவரும் சீரஞ்சீவி மாருதி, ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் எழுந்தருளுகிறார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களிலெல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்- பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.

  இதனால்தான் துளசி தாஸர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதஷணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதி எழுந்தருளியிருப்பார் என்பது அவருக்குத் தெரியும். அனுமான் அன்பின் வடிவ-அறத்தின் வடிவம்-அருளின் வடிவம்-ஆனந்தத்தின் வடிவம்-இன்பத்தின் இருப்பிடம்-இகபர சுகத்தின் உருவம்-ஈகையின் ஈடில்லாத் தலைவர்-உத்தம குணத்தோடு கூடிய உதார புருஷர்-ஊர்த்தவ மூர்த்தியின் மோகன வடிவம்.

  எங்கும் நிறைந்திருக்கும் எழில் வடிவம்- ஏகாந்த சேவையால் எழுந்தருளிய ஞான வடிவம்- ஐசுவரியங்களை அள்ளித் தரும் காமதேனு-ஒப்பற்ற வரம்தரும் கற்பகத்தரு-ஓங்கார ரூபத்தின் சிருங்கார வடிவம்- ஒளஷதமாக வந்தருளும் அமுத கலசம்-என்றெல்லாம் ஆஞ்சநேயப் பெருமானை வார்த்தை களால்-உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொண்டே இருக்கலாம்.

  ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி ஆராதிக்கவேண்டும். வாலில் குங்குமப் பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து அக மகிழ்வர்.

  வடைமாலை கொழுப்பு நிறைந்த அரக்கர்களைப் போர்க் களத்திலே தமது புஜபலத்தால் வடை தட்டுவது போல் தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். எனவேதான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச் சேர்த்து, அவருக்கு வடை மாலை செய்து சாத்துகிறார்கள்.

  சீதாபிராட்டியார் பரிசளித்த முத்து மாலையைச் சுவைத்து, ராமநாம சுகம் அதில் உள்ளதா என்று பார்த்து பிய்த்து எறிந்தவர் ஆஞ்சநேயர். அது போலவே வடை மாலையையும் அவர் கழுத்தில் போட்டவுடன் சுவைத்துப் பார்த்துப்போட்டு விடுகிறார். அவர் திருவமுது செய்த அந்த உச்சிஷ்டம் மிகவும் விசேஷமானது!

  NO COMMENTS

  LEAVE A REPLY