கண்ணை மறைக்கும் கால சர்ப்பதோஷம்!

0
202

நாகதோஷங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தோஷமாகக் கால சர்ப்ப தோஷத்தைச் சொல்வார்கள். ஒரு ஜாதகருடைய ஜனன ஜாதகத்தில் ராகுவுக்கும் – கேதுவுக்குமிடையே எல்லாக் கிரகங்களும் இருக்குமானால் அந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷ ஜாதகம் எனப்படும். ஒன்று அல்லது இரண்டு வெளியில் இருந்தாலும் கால சர்ப்ப தோஷமே என்பவர்களும் உண்டு.

கால சர்ப்ப தோஷம் எப்படிப் பட்டது தெரியுமா?

ஒரு ஊரில் பெரிய தனவந்தன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு லட்சாதிபதி. ஆஸ்திகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தான். அவனிடத்தில் எப்போதும் தர்ம சிந்தனை குடி கொண்டிருந்தது. தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கக் கூடிய வள்ளல் தன்மை படைத்தவனாக இருந்தான். கொடுத்தால் செல்வம் குறையத்தானே செய்யும்? காலப் போக்கில் அவன் கையில் இருந்த பொருள்கள் கரைந்தன. இருந்தாலும் அவன் அறச் செயல்களை நிறுத்த விரும்பவில்லை. நில, புலன்களை விற்றான்; வண்டி வாகனங்களை விற்றான். விற்ற பொருளால் தான தர்மங்களைச் செய்தான். ஊரிலிருந்த கோயில் குளங்களுக்குத் திருப்பணிகளைச் செய்தான்.

காலப்போக்கில் அவனிடம் இருந்த எல்லா பொருள்களையும் விற்க வேண்டியதாயிற்று. வீடு வாசல் இல்லாத நிலையையும் அடைந்தான். சிறு சிறு பொருள்களைக் கூட விற்றான். கடைசியில் மிஞ்சியிருந்தது ஒரு சிறிய மனை மட்டும்தான்.

அந்த மனை கோயிலுக்கு அருகில் இருந்தது. முழு மனையளவு கூட இல்லை. அதன் நடுவிலே ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டில் பட்டுப் போன பழைய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் இழந்த செல்வந்தன் அந்த மனையில் குடியேறினான். மரத்தைச் சுற்றிச் சில கால்களை நட்டான். சிறிய பந்தலைப் போட்டான். அதன் நிழலில் வசித்து வரலானான்.

அந்த நிலையில் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் “ஏன் இப்படித் தரித்திரத்தில் குடியிருக்க வேண்டும்? இந்த மனையில் ஒரு சிறிய வீட்டை கட்டிக் கொள்ளலாமே” என்று அறிவுரை சொன்னார்கள்.

வீடு கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. தன் நண்பர்களிடம் “நான் இறந்த பின் என்னை இந்த இடத்தில் புதைத்து விடுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டனர்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் அவன் காலமானான். நண்பர்கள் சமாதி கட்டப் பூமியைத் தோண்டினார்கள். சில அடிகள் தோண்டியவுடன் ‘ணங்’ என்ற சத்தம் கேட்டது. மெல்ல தோண்டிப் பார்த்த போது பல பித்தளைக் குடங்களில் பொற்காசுகளும், நவரத்திரனங்களும், புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

வெளியில் எடுத்த நண்பர்கள் அளவுக்கதிகமான செல்வத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம் இதுதான் கால சர்ப்ப தோஷத்தின் விளையாட்டு. தனக்குக் கீழ் விலைமதிப்பற்ற பொருள்கள் இருந்தும் அறியாமல் காலத்தைக் கழித்தான் அந்த ஏழை. கண்ணை மறைப்பதுதான் கால சர்ப்ப தோஷம். கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட வழி செய்யக்கூடியவர் திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் என்பதில் ஐயமில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY