அற்புதங்களை நிகழ்த்திய அவதூத சுவாமிகள்

0
213

சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்த புண்ணிய பூமியான சிதம்பரத்தில் தன்னுடைய தவ வலிமையால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி அங்கேயே மகாசமாதியடைந்தவர் ஸ்ரீஅவதூதசுவாமிகள். அவதூதம் என்பது துறவறத்தின் ஒரு நிலை. அதாவது நிர்வாண நிலை.

இந்த நிர்வாண நிலை என்பது மிகப்பெரிய தவம். அவதூத சுவாமிகள் இமயமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிர்வாண நிலையிலேயே தவம் செய்து வந்துள்ளார். அவதூத சுவாமிகள் கொல்லிமலை அருகே அவதரித்ததாகவும் அவர் தனது 14வது வயதில் இமயமலை சென்று அங்குள்ள வசிஷ்டர் குகையில் தன்னுடைய குருவான ஆத்மானந்த சுவாமிகளிடம் நிர்வான தீட்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இமயமலையில் 10 ஆண்டு காலம் முறையாக தவம் புரிந்து குரு ஆசியுடன் நேபாளம் சென்று அங்கு தொண்டு செய்து வந்துள்ளார். சுவாமிகள் நேபாளத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் அந்நட்டு மன்னன் மற்றும் அவரது மனைவியும் பக்தியுடன் சுவாமிகளை வணங்கி வந்துள்ளனர்.

நேபாளத்தில் இருந்து குருவின் உத்தரவின் பேரில் அவதூத சுவாமிகள் அப்போது தமிழகத்தில் தில்லை என போற்றப்படும் சிதம்பரம் நகருக்கு வந்துள்ளார். ஆன்ம அதிர்வலைகள் அதிகம் உள்ள சிதம்பரம் நகரம் சுவாமிகளுக்கு பிடித்து போக அங்கேயே தங்கி விட்டார். சிதம்பரம் நந்தவனம் பகுதியில் தங்கி தில்லை நடராஜரையும், தில்லை காளியையும் வழிபட்டு தனது தவத்தை தொடர்ந்து வந்துள்ளார்.

அவருக்கு தில்லைவாழ் அந்தணர்கள் வேண்டிய உதவிகளை செய்து வந்திருக்கிறார்கள். அவதூத சுவாமிகள் நடைபயணமாகவே சிதம்பரம், நடராஜபுரம், கிள்ளை மற்றும் சுற்றியுள்ள கிராமபுறங்களுக்கு சென்று அருளாசி வழங்கியுள்ளார். சிதம்பரத்திற்கு வந்த போது சுவாமிகள் அவதூத நிலையிலேயே இருந்துள்ளார். இதனால் பல இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளார். நாளடைவில் சுவாமிகள் ஒரு பெரிய மகான் என்பதை சிதம்பரம் மற்றும் சுற்றுபுற மக்கள் யாவரும் உணர்ந்துள்ளனர்.

பெரும்பாலும் சுவாமிகள் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள மாணிக்க விநாயகர் கோயிலில்தான் அமர்ந்திருப்பார் என்றும் அவர் அங்கு விளையாடும் குழந்தைகளுக்கு கீழே கிடக்கும் மண்ணை அள்ளி கொடுப்பார். குழந்தைகள் கைகளில் வாங்கி அதனை மூடி திறந்ததும் யார், யார் எதை விரும்பினார்களோ அந்தந்த திண்பண்டங்களாகவும், பொருளாகவும் மாறியிருக்கும் என கூறப்படுகிறது. இவர் சிதம்பரத்தில் தங்கியிருந்த போது நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் என்கின்றனர் வயதான பெரியவர்கள்.

சுமார் 30 ஆண்டு காலம் சிதம்பரத்தில் வாழ்ந்த சுவாமிகள் சிதம்பரம் கீழவீதியில் 20.06.1965ம் ஆண்டு ஆணி மாதம் 6ம்தேதி சதயம் நட்சத்திரத்தன்று பரிபூரணமடைந்தார். சுவாமிகள் தவம் புரிந்த சிதம்பரம் நந்தவனம் பகுதியிலேயே சமாதி (அதிஷ்டானம்)அமைக்கபட்டு அன்று முதல் பக்தர்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அவதூத சுவாமிகளின் பிரதான சீடரான சிந்தாலய ஈசன் அப்புகுட்டன் சுவாமிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள போத்தங்கோடு, கள்ளிக்காடு, நெய்யாத்தங்கரை ஆகிய இடங்களில் தன் குருவுக்காக ஆசிரமங்கள் அமைத்து அங்கு தினமும் குரு பிரார்த்தனை செய்து வருகிறார். அவருடைய ஆசியால் சிதம்பரம் அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் முறையாக டிரஸ்ட் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

சாதரணமாக இருந்த அதிஷ்டானம் கடந்த 20.10.2002ம் ஆண்டில் விரிவு செய்யப்பட்டு முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது அவதூத சுவாமிகளின் அதிஷ்டானத்தில் தினமும் 2 வேளையும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. வாரம்தோறும் வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறுகின்றன.

அவதூதசுவாமிகளை வழிபட்டு புத்திரபாக்கியம், திருமண தடை, நாகதோஷம், கடன்தொல்லை, குடும்ப பிரச்னை, மனஅமைதியின்மை இது போன்ற துன்பங்களில் இருந்து மீண்டு நிம்மதியடைந்த பக்தர்கள் பலர் உள்ளனர்.  வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் மாலை வேளையில் வழிபடுதல் நலம்.

அதிஷ்டானத்தில் தில்லை வாழ் அந்தணரான சங்கர நடராஜ தீட்சிதர் பூஜைகளை நடத்தி வருகிறார். அவதூத சுவாமிகளின் குருபூஜை வரும் 25.06.16 சனிக்கிழமையன்று நடக்கிறது. அன்று காலை 8மணி முதல் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜை, ஹோமம், திருமுறை இன்னிசை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY