வில்லாதி வில்லன் வீரப்பன் – திரை விமர்சனம்

0
102

வீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வீரப்பன் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டது ஏன்? இதற்கு யார் காரணம்? என்பதையும் இந்த படத்தில் கூறியிருக்கிறார்.

வீரப்பன் பற்றி பல பேர் பல கதைகள் கூறுகின்றனர். அவரைப் பற்றி பல்வேறு தொடர்களும், படங்களும் வந்துவிட்டன. இதில் எது உண்மை என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால், ராம்கோபால் வர்மா தனக்கு தெரிந்த கதையை கொஞ்சம் திரில்லர் கலந்து சொல்ல நினைத்திருக்கிறார். இதில் வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜ், பார்க்க அச்சு அசல் வீரப்பனை போன்றே இருக்கிறார். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.

வீரப்பனை கொல்ல நடக்கும் திட்டத்தில் முதன்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சச்சின் ஜோசி, மிடுக்கிலும் நடிப்பிலும் தன் பங்கை சரியாக செய்தாலும், அவரிடமிருந்து ஏதோ ஒன்று குறைவதுபோல் தெரிகிறது.

வீரப்பனின் மனைவியாக வரும் உஷா ஜாதவ் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.

வீரப்பனை பற்றி முதலில் குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்திய விதம் அருமை. ஆனால், அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி விறுவிறுப்பாக வேகமெடுத்திருக்கிறது. மேலும், வீரப்பன் பற்றி நமக்கு தெரிந்த பல விஷயங்கள் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

இப்படம் நேரடியான தமிழ் படமாக இருந்திருந்தால் கொஞ்சம் மனதில் ஒட்டியிருக்கும், படம் ஏதோ இந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் போன்ற உணர்வை தருகிறது. படத்தில் வரும் காடுகள் நடிகர்களைவிட மிரட்டியிருக்கிறது. சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை சுமாரான படமாக ஆக்கிவிட்டது.

மொத்தத்தில் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ விறுவிறுப்பு இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY