நல்லன எல்லாம் தருவாள் ‘மீன் குளத்தி அம்மன் கோயில்’

    0
    346

    கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம். (கோயம்புத்தூரில் இருந்து சுமார் 78 கி.மீ. தொலைவு). இங்கேயுள்ள மீன் குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தேவியாகத் திகழ்கிறாள். இந்தக் கோயிலை, ஸ்ரீபழைய காவில் பகவதி கோயில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.கோயிலும், கோயிலையட்டி உள்ள பெரிய தீர்த்தக் குளமும் கொள்ளை அழகு! மீன் குளத்தி பகவதி வேறு யாருமில்லை… சாட்சாத் மதுரை மீனாட்சியேதானாம்!

    முன்னொரு காலத்தில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் வசித்த மூன்று வீர சைவ மன்னாடியார் (தமிழ்நாட்டில் மன்றாடியார்) இனத்துக் குடும்பங்கள் கடும் பஞ்சத்தில் இருந்து தப்ப, பசுமையான இடம் தேடிக் கிளம்பின. அவர்கள் செய்து வந்த வைர வியாபாரத்துக்கும் பஞ்சப் பிரதேசத்தில் வழியில்லாமலிருந்தது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பால், அவர்களது வணிகமும் செழித்தது. எனவே, அங்கேயே வசிக்கத் துவங்கினர்.

    இவர்களில், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையின் மீது அளவற்ற பக்தி கொண்ட பெரியவர் ஒருவர், தன் குடும்பத்தாருடன் மதுரைக்குச் சென்று, அம்பாளைத் தரிசித்து வருவது வழக்கம். வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், காடு- மலைகளைக் கடந்து, நடந்தே சென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்து வருவார்.

    ஒருமுறை, மதுரையம்பதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய பிறகு, அந்தப் பெரியவர் நீராடுவதற்காகக் குளத்துக்குச் சென்றார். கரையில் குடையை விரித்து, பொருட்களை அதனடியில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பிறகு கரைக்கு வந்தவர், குடையை எடுக்க முயன்றார். ஆனால், குடை அசையக்கூட இல்லை. குடையை மட்டுமின்றி, அதன் கீழே வைத்திருந்த பொருட்களையும் எடுக்கமுடியவில்லை. அதிர்ந்து போனார் பெரியவர்.

    பிறகு, அங்கே விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, ‘இந்தப் பொருட்களையும் குடையையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ, வந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குச் சென்றார். வீட்டில் விவரம் சொல்லி, குடும்பத்தாருடன் குளக்கரைக்கு வந்தார். ஆனால், அவர் களாலும் எடுக்கமுடியவில்லை. அப்போது, அங்கே ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. அனைவரும் சிலிர்த்தார்கள். ஜோதிடர் ஒருவரிடம் விவரம் சொன்னார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு, ‘இந்தக் குடை பதிந்திருக்கும் இடத்தில், மதுரை ஸ்ரீமீனாட்சி பிரஸ்னம் ஆகியிருக்கிறாள்’ என்று தெரிவித்தார்.

    அப்போது, ‘இந்தத் தள்ளாத வயதில் நீ நெடுந்தொலைவு வந்து சிரமப்பட வேண்டாம். உனக்காக இங்கேயே வந்திருக்கிறேன். இங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படி அந்தப் பெரியவரும், அவர் குடும்பத்தாரும் அங்கே ஒரு கோயிலை எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள். அதுவே ‘குடைமன்னு’ என இன்றும் அழைக்கப்படுகிறது.

    காலங்கள் ஓடின. சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு, ‘வீரசைவ மன்னாடியார்’ என்ற அந்தச் சமூகத்தின் தலைவர் மற்றும் கோயில் அர்ச்சகர் ஆகியோரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், ஊருக்குள் புதிதாகக் கோயில் கட்டும்படி பணித்தாள். அதன்படியே ஊரின் மையத்தில் கோயில் கட்டப்பட்டு, புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மன்னாடியார் குடும்பத்தாராக இருந்து சிறப்புறச் செயல்பட்டனர்.

    ஆரம்ப காலத்தில் மூன்றாக இருந்த மன்னாடியார் குடும்பங்கள் இப்போது மொத்தம் 110 மனையைச் சேர்ந்தவர் களாக விரிவடைந்துள்ளன. வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக,  வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மன்னாடியார் குடும்பத்தார், முக்கிய விழாக்களின்போது இங்கு வரத் தவறுவதில்லை.

    மீன்குளத்தி பகவதி கோயில், கேரள பாணியில் அமைந்த அற்புதக் கோயில். வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் கொடிமரம் தேக்கு; இதனை செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர். இதைக் கடந்தால் மீன்குளத்தி பகவதியின் அற்புதமான சந்நிதி. மூல விக்கிரகம் தவிர, சப்த மாதர்கள், ஸ்ரீகணபதி, ஸ்ரீவீரபத்ரர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீபரமேஸ்வரன், ஸ்ரீபைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

    திறக்கும் நேரம் 

    ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மற்ற நாட்களில், அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு, காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மற்றபடி, எல்லா நாட்களிலும் மாலை 5.30 மணிக்குத் திறந்து இரவு 7.30 மணிக்கு நடைசாத்துவது வழக்கம்.

    நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல விழாக்கள் இருப்பினும் 8 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. ஒட்டன் துள்ளல், கதகளி (ராமாயண, மகாபாரதக் காட்சிகளை கதகளி ஆட்டத்தில் கண்டு மகிழலாம்.) போன்றவை மாசித் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்.

    குளக்கரையில் வைத்த குடை மற்றும் பொருட் களை எடுக்க முடியாதபடி மண்ணில் புதைந்திருந்த போது, இரண்டு சிறுவர்கள் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள், அல்லவா? அந்தச் சிறுவர் களுக்கு நன்றி தெரிவிக்கிற விதமாக, சிறுவர்களின் வழியில் வந்த குடும்பத்தாரது வீரவாள், திருவிளக்கு ஆகியவை மீன்குளத்தி பகவதிக்கு நடைபெறும் ஊர்வலத்தில் முன்னே எடுத்துச் செல்லப்படும்.

    குறிப்பிட்ட சமூகத்தவர் நிர்வகிக்கும் ஆலயம் என்றாலும், அனைத்து மக்களும் பாரபட்சமின்றி வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    திருமண பாக்கியம், சந்தான பாக்கியம், நோய் நிவாரணம், காரிய ஸித்தி மற்றும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்க அருள்பாலிப்பாள்  ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன். தீராத நோயால் அவதிப்படுவோர், இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினால், விரைவில் குணம் அடைவார்கள் என்பது ஐதீகம்! சோழ தேசத்துக் குடும்பத்தாருக்கு அடைக்கலம் தந்து வியாபாரத்தையும் செழிக்கச் செய்தவள். எனவே இங்கு வந்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை” என்று நம்பிக்கை மலரச் சொல்கிறார் அப்புண்ணி மன்னாடியார்.

    அழகிய மீனின் கண்களை உடையவள் மதுரை அங்கயற்கண்ணி ஸ்ரீமீனாட்சி. கேரள மண்ணில், மீன்குளத்தி பகவதி எனும் திருநாமத்துடன் அழகு மிளிரக் காட்சி தரும் தேவி, இங்கேயும் அருள் மழை பொழிந்து வருகிறாள்.

    *********************************************************************

    குழந்தையின் பசியறிந்து அமுதம் ஊட்டுபவள் தாய். ‘அன்னையுடன் அறுசுவை போம்’ என்பது ஓளவையார் வாக்கு. பூலோக அன்னைக்கு இவ்வளவு பெருமையென்றால்… தன் குழந்தையைப் போன்று பக்கத்து வீட்டுக்குக் குழந்தையையும் நேசிக்கத் தெரியாத பூலோகத் தாய்க்கே இவ்வளவு பெருமை என்றால், அகில உலகங்களுக்கும் தாயான அம்பிகையின் பெருமையை, யாரால் அளவிட முடியும்?
    தெய்விகத் தாய்மைக்கு அடையாளம்…
    தெய்வம் எந்த ஒரு ஜீவனைப் படைத்தாலும், அந்த ஜீவனுக்கு வேண்டிய உணவைப் படைத்துவிட்டு, அதன் பிறகே அந்த ஜீவனைப் படைக்கும். ஆடோ, மாடோ, கன்று ஈனுவதற்கு முன்னால், அவற்றிடம் பாலை உருவாக்கிவிடும். பிறந்த கன்று உடனே தாயிடம் பால் அருந்தும். கன்று பிறப்பதற்கு முன்னதாகவே, அதற்கு வேண்டிய உணவைத் தாயிடம் படைத்ததே… அதுதான் தெய்விகத் தாய்மை! அப்படியான தெய்விகத் தாய்மையையே  சாட்சாத் அம்பிகையையே ‘முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள்’ என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
    வசந்தமாக வந்து நம்மை வாழ்விப்பவள் அம்பிகை. அதனால்தான், காலங்களிலும் ‘வசந்த காலமே’ முதல் இடம்பெற்று இருக்கிறது. அற்குக் கட்டியம் கூறுவதுபோல், மாம்பூக்களின் வாசமும், வேப்பம் பூக்களின் வாசமும் வீசி, மனங்களை வசீகரிக் கின்றன. வருடமும் ‘வசந்த ருது’ என்ற வசந்த காலத்துடன் ஆரம்பிக்கிறது.
    அப்படிப்பட்ட வசந்த காலம் சித்திரையில் துவங்கு கிறது. எனவே, சித்திரையில் வரும் பெளர்ணமி மிக மிக விசேஷம் வாய்ந்தது. சித்ரா பெளர்ணமி அன்று சந்திரன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, சக்தி மிகுந்த தன் கதிர்களை அப்படியே பூமியில் பாய்ச்சிப் பதிக்கிறது. பற்பல அபூர்வமான மூலிகைகள் அந்தக் கதிர்களை ஏற்று, ஆற்றல் பெறுகின்றன. மேலும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று சந்திரனின் கதிர்களால், பூமியில் சில இடங்களில் (மலைகளில்) உப்பு (நாய்க் குடை போலப்) பூக்கும். இந்த உப்பு மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது.
    இவ்வளவு சிறப்புகள் இருந்தும், இவற்றையெல்லாம் அனுபவிக்க, நமக்குக் கொடுப்பினை வேண்டும் அல்லவா? அதற்கு என்ன வழி? அம்பிகையைச் சரணடைய வேண்டியது தான்! அம்பிகையை ஏன் சரணடைய வேண்டும்? தொடர்ந்து படியுங்கள்!
    சித்திரகுப்தன் பிறந்த கதை…
    எழுதாக் கிளவியான வேதத்தை மூச்சுக் காற்றாகக் கொண்ட சிவபெருமான் அம்பிகையிடம், ‘தேவி! அவரவர் செய்யும் புண்ணிய பாவங்களை எழுதிவைக்க ஒருவன் வேண்டும்’ என்றார்.
    அம்பிகையும், ‘ஆமாம் சுவாமி! உங்கள் திருவுளக் கருத்தின் படியே செய்யுங்கள்!’ என ஆமோதித்தாள்.
    உடனே சிவபெருமான் புன்னகையுடன், ”அப்படியானால், உன் திருக்கரங்களால் ஒரு பொற்பலகையைக் கொண்டு வா” என்றார். அம்பிகையும் ஒரு பொற்பலகையைக் கொண்டு வந்து சிவபெருமானின் திருமுன்னால் வைத்தாள்.
    அந்தப் பொற்பலகையில் ஓர் அழகான வடிவத்தை வரைந்த சிவபெருமான், ”தேவி, இந்த ஓவியத்தைப் பார்!” என்றார். அம்பிகை தன்னுடைய கருணை பொங்கும் விழிகளால் அந்த ஓவியத்தை ஆழ்ந்து பார்த்து, ”மகனே வா!’ என்று சொல்ல, ஓவியக் குழந்தை உயிர் பெற்று வந்தது. அந்தக் குழந்தைதான் சித்திர புத்திரர்!
    அம்பிகையின் அருளால், அக்குழந்தை அவதரித்த நாள் சித்ரா பெளர்ணமி. சித்திரத்தில் இருந்து அவதரித்ததால், சித்திரை மாதம் அவதரித்ததால், ‘சித்திரபுத்திரர்’ எனத் திருநாமம் பெற்றார். இவரே, பின்னர் இந்திரன்  இந்திராணி தம்பதிக்குக் குழந்தை யாக அவதரித்து, சித்திரக் குப்தன் என்று பெயர் பெற்றார் (இது சுருக்கமான திருக்கதையே). ‘குப்தம்’ என்றால் மறைவாக  வெகு ரகசியமாக என்பது பொருள். என்னதான் மறைவாக, வெகு ரகசியமாக நாம் பாவங்கள் செய்தாலும், அவற்றையெல்லாம் குறித்துவைப்பவர், இந்தச் சித்திரகுப்தன்.
    ஆசையும் கோபமும் தூண்ட, நாம் பாவங் களைச் செய்கிறோம். அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், அம்பிகையைச் சரண்புக வேண்டும். இதை உணர்த்தும் விதமாக…
    தேடியுனைச் சரண் அடைந்தேன் தேசமுத்துமாரி
    கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்…
    என்று பாடத் தொடங்கிய பாரதியார், பாடலை நிறைவு செய்யும்போது, ‘நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்’ என அறுதியிட்டுக் கூறுகிறார். பாரதியார் மட்டுமல்ல, படைக்கும் கடவுளான பிரம்மதேவரே அம்பிகையைச் சரண் அடைந்து அருள் பெற்ற திருக்கதை உண்டு.
    சித்ரா பெளர்ணமியில் கிடைத்த திருவருள்!
    பிரம்மதேவரின் பலகாலத் தவத்துக்கு இரங்கி சிவபெருமானும் அம்பிகையும் அவருக்குத் தரிசனம் தந்து, படைக்கும் தொழிலைச் செய்ய ஆற்றல் தந்து அருள் புரிந்தார்கள். அப்படி நான்முகன் அருள்பெற்ற திருத்தலம், ‘ஆதிபுரி’ எனும் திருநாமம் பூண்ட திருவொற்றியூர். இங்கே ஸ்வாமியின் திருநாமம் ஆதிபுரீஸ்வரர்; அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி  வடிவுடையம்பாள். பிரம்மதேவர் இங்கு அம்பிகையை வழிபட்ட திருநாள் சித்திரா பொளர்ணமி.
    சித்திரா பௌர்ணமி புண்ணிய தினத்தன்று இந்த அம்பிகையுடன் சேர்த்து இன்னும் இரு அம்பிகைகளையும் தரிசிப்பது, காலங்காலமாக இருந்து வருகிறது.
    காலையில், சென்னையை அடுத்துள்ள மேலூரில் எழுந்தருளியிருக்கும் திருவுடையம்மன். மதியம் உச்சிப் பொழுதில், திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் வடிவுடை நாயகி. மாலையில் சென்னையை அடுத்த அம்பத்தூர்  திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கும் கொடியிடை நாயகி. இந்த முறைப்படி, இந்த  மூன்று அம்பிகைகளையும் சித்ராபெளர்ணமி தினத்தில் தரிசித்தால், பாவ வினைகள் தீரும்; புண்ணியம் சேரும்.
    அடுத்ததாக, நினைப்பவர் மனதையே கோயிலாகக் கொண்டு இன்னல் தீர்க்கும் ஓர் அம்பிகையின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.
    அன்னையைத் தேடி…
    ஆடல் வல்லானான நடராஜர் திருநடனம் புரியும் சிதம்பரத்தில், விபரீதம் விளைந்தது. நாமும்தான் கொஞ்சம் ஆடுவோமே என்று இயற்கைச்சீற்றம் விளைந்ததைப் போல, இடி, மழை, மின்னல் எனும் மூன்றும் கூட்டணி அமைத்து சிதம்பரத்தையே புரட்டிப் போட்டன. உணவும், பஞ்சமும், உயிர்ப் பயமும் ஆட்டிப் படைக்க, அவிழ்த்துக் கவிழ்த்த நெல்லிக்காய் மூட்டையைப்போல மக்கள் சிதறினார்கள். அப்படிக் சிதறியவர்களில், மூன்று குடும்பத்தார்கள் மதுரையை அடைந்தார்கள்.
    மன்றாடியார் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் வைர வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்களின் குல தெய்வம் மதுரை மீனாட்சி. அதன் காரணமாகவே அவர்கள், மதுரைக்குச் சென்றார்கள். ஆனால் அங்கும் அவர்களால் தங்க முடியவில்லை. அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று.
    அப்போது, அவர்களில் இளையவராக இருந்த மன்றாடியார் ஒருவர் (இனிமேல் இவரை, வைர வியாபாரி என்றே பார்க்கலாம்) மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத் துக்கொண்டார். அதன் மூலம் மீனாட்சி அம்பாளே தன்னுடன் இருப்பதாக, அவருக்கு நினைப்பு. அந்தச் சிறு கல்லும் அவர் மூட்டையில் இடம் பெற்றது.
    மதுரையில் இருந்து புறப்பட்ட அவர்களின் பயணம் கேரளா வில் பல்லசேனா என்ற இடத்தை அடைந்ததும் நின்றது.
    அங்கிருந்த வளப்பமும், நீர் நிலைகளும், அவற்றுக்கு மேலாக, அங்கிருந் தவர்களின் தூய்மையான உள்ளங்களும், வைர வியாபாரி களின் பயணத்தை நிறுத்தின. எல்லோரும் அங்கேயே நிலைத்து, நன்றாகச் செழித்து வாழ்ந்தார்கள்.
    தேடி வந்து கோயில் கொண்டாள்!
    மதுரையில் இருந்து கல்லைக் கொண்டு வந்த வியாபாரி, அதைப் பிரியாமல் மீனாட்சியாகவே கருதி வழிபட்டு வந்தார். அதேநேரம், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தால், மதுரைக்குப் போய் அன்னை மீனாட்சியைத் தரிசித்து விட்டே பயணத்தை மேற்கொண்டார்.வியாபாரம் நன்கு வளர்ந்தது. கூடவே, வைர வியாபாரியின் வைரம் பாய்ந்த உடலில் முதுமையும் வளர்ந்தது. அவர் சொன்ன படியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவரது உடல், இப்போது தான் இழுத்த இழுப்புக்கு அவரை வளைத்துப் பாடாய்ப் படுத்தியது. இந்த நிலையிலும், ஒருமுறை அவர் மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். புறப்பட்டவர், அந்த ஊர்க் குளக்கரையில் மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்து விட்டு, அவற்றை மறைத்தாற் போன்று ஒரு பனையோலைக் குடையையும் வைத்துவிட்டு குளத்தில் இறங்கி நீராடினார்.
    நீராடும்போது, அவரது உள்ளம் குமைந்தது. ‘தாயே! தேவி மீனாட்சி! உன் தரிசனம் எனக்குக் கிட்டாதா? முதுமை என்னை முடக்கிவிட்டதே! தரிசனம் தரக்கூடாதா தாயே!’ என்று புலம்பிய படியே, நீராடிவிட்டுக் கரையேறினார்.
    அதன்பின், கரையில் தான் வைத்திருந்த பனையோலைக் குடையையும், மூட்டை முடிச்சுகளையும் அவர் எடுக்க முயற்சி செய்தபோது, அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை. உடனே, ஒட்டுமொத்தமாக எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு, மூட்டையில் இருந்த பொருட்களை தனித்தனியே வெளியில் எடுத்தார். கடைசியில்… அவர் மீனாட்சி அம்பாளாகக் கருதி வைத்திருந்த சிறு கல் மட்டும் எஞ்சி இருந்தது. அதை அசைக்கக் கூட முடியவில்லை. அதேபோல் குடையையும் நகர்த்தமுடிய வில்லை!
    வைர வியாபாரி மனம் நடுங்கிப்போய், கேரளாவில் அப்போ திருந்த பிரபல ஜோதிடரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி ‘என்னவோ தெரியவில்லை, அம்பிகைக்கு என் மேல் கோபம்’ எனப் புலம்பினார்.
    ஜோதிடர் சற்று நேரம் ஜோதிடம் பார்த்துவிட்டுக் கூறினார்:
    ‘ஐயா, வைர வியாபாரியே! அம்பாளுக்குப் போய் உங்கள் மேல் கோபமா? கருணையை அள்ளிக் கொட்டியிருக்கிறாள் அவள். உங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, உங்கள் பக்திக்காக அவளே இங்கு வந்துவிட்டாள். அதனால்தான், அவள் குடிகொண்ட அந்தக் கல்லையும் குடையையும் உங்களால் எடுக்க முடியவில்லை. அம்பாள் குடிகொண்ட அங்கேயே கோயில் உருவாகட்டும். அனைவரும் அவளை வணங்கி அருள் பெறட்டும்’ என்றார்.
    வைர வியாபாரிக்குக் கண்கள் பனித்தன. கைகளைக் குவித்து ‘தாயே! இந்த எளியேனுக்காகத் தேடி வந்து தரிசனம் தந்தாயா?” என்று நெக்குருகியவர், கல்லும் குடையும் இருந்த இடத்திலேயே அன்னை மீனாட்சிக்கு அழகானதோர் ஆலயம் எழுப்பினார்.
    கல்லிலும் குடையிலும் அம்பிகை குடிவந்ததால், அந்த இடம் ‘குடமந்து’ என இன்னும் அழைக்கப்படுகிறது. அம்பிகை அருள் வெளிப்பட்ட, ‘சித்திரை அஸ்தம்’ அன்று இந்த திருத்தலத்தில் வெகு விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.
    கேரளாவில், பாலக்காட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவில் ‘மீன் குளத்தி அம்மன் கோயில்’ என அழைக்கப்படுகிறது. அன்னை மீனாட்சி, துள்ளிக்குதிக்கும் மீன்கள் நிறைந்த குளத்தின் கரையில் எழுந்தருளி இருப்பதால், ‘மீன் குளத்தி அம்மன்’ என்ற பெயரும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
    இத்திருக்கோயிலுக்கு பிள்ளை வரம் கேட்டு வருபவர்கள், கணவன்  மனைவி பிணக்கு தீர வருபவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டி வருபவர்கள், ஆரோக்கியம் வேண்டி வருபவர்கள்… எனப் பலரும், குறைகள் நீங்கி மகிழ்வதும், நன்றிக்கடனாக மறுபடியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுப் போவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
    ‘சந்திரவதனி’ எனத் துதிக்கப்படும் அம்பிகை சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவள் மட்டுல்ல, சந்திரனைப் போன்றே குளுமையும் நிறைந்தவள். அப்படியான சந்திரவதனி, நம் தாபத்தை யும், துக்கத்தையும் தணித்து, நமக்கு சர்வ மங்கலங்களையும், நல்லன எல்லாவற்றையும் வழங்கிட, அவளை வேண்டிப் பணிவோம்.

     

    NO COMMENTS

    LEAVE A REPLY