நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்

    0
    220
    பழத்தின் மருத்துவபண்புகள்
    நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.
    ஆனால் பழம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பழங்களை அளவுடன் உண்ண தர வேண்டும்.
    சிலருக்கு இந்த பழங்களை உண்ணும் போது தொண்டைக்கட்டும் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
    பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.

    விதையின் குணங்கள்

     

    நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.

    இலையின் குணம்

    நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

    மரப்பட்டையின் குணம்

    நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச்கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது.

     நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும்.
    வேரின் குணம்

     

    மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும் .

    நீரிழிவு நோய்:

    இன்று நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

    ரத்தப்போக்கு:

    பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.

    சிறுநீர் எரிச்சல்:

    சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

    பேதி:

    நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இருவேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

    தொண்டைப்புண், தொண்டை அழற்சி:

    10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ளவேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய்கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப்புண், தொண்டை அழற்சி குணமாகும்.

    பிற பயன்கள்:

    நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

    தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும்.

    நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.

    நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

    ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.

    நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்

    புரதம் 0.7 கிராம்
    கொழுப்பு 0.3 கிராம்
    மாவுப்பொருள் 0.9 கிராம்
    கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
    கால்சியம் 14.0
    பாஸ்பரஸ் 15
    இரும்பு 1.2
    தயமின் 0.03
    நியாசின் 0.2
    வைட்டமின் சி 18
    மெக்னீசியம் 35
    சோடியம் 26.2
    பொட்டாசியம் 55
    தாமிரம் 0.23
    கந்தகம் 13
    குளோரின் 8
    ஆக்சாலிக் அமிலம் 89
    பைட்டின் பாஸ்பரஸ் 2
    கோலின் 7
    கரோட்டின் 48

    NO COMMENTS

    LEAVE A REPLY