குழந்தை வரம் அருளும் சாட்சிநாதர்

  0
  166

  ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்பது பழமொழி. இங்குதான் வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி பாய்ந்தோடி தஞ்சை தரணியை வளம் கொழிக்கும் பூமியாக்கி இருப்பதால் உணவுக்கு பஞ்சமின்றி மக்கள் வளமுடன் வாழ்ந்து வருவது கண்கூடு.

  திரும்பிய திசை எங்கும் அருள் வழங்கும் ஆலயங்கள். வானளாவ உயர்ந்தோங்கி நிற்கும் கோபுரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் கவினுரு காட்சி.

  தஞ்சை மாவட்டத்தில் தேவார பாடல் ஆசிரியர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற பலகோவில்கள் உள்ளன. ஒருவர் மட்டும் தனியாகவோ அல்லது இருவர் மட்டும் பாடிய கோவில்களாகவோ இருக்கின்றன. ஆனால் 4 பேரும் சேர்ந்து பாடிய கோவில்கள் சில. அந்த அபூர்வ கோவில்களில் திருப்புறம்பயம் சாட்சிநாதசுவாமி கோவிலும் ஒன்று.

  பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி சிறப்பாக குறிப்பிட்டு உள்ளது.

  புகழ்பெற்ற திருப்புறம்பயம்

  மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலின் இறைவனது பெயர் சாட்சிநாதர். ஒரு வணிகப்பெண்ணின் நிமித்தமாக இவ்வூர் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி கூறியமையால் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். இறைவியின் திருநாமம் கரும்படுசொல்லி. தேவாரபாடல் ஆசிரியர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல்பெற்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

  இக்கோவிலில் இரு தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கி உள்ளதாகவும் ஐதீகம். தலவிருட்சம் புன்னை என்றாலும் இங்கே உள்ள வன்னிமரம் மதுரைக்கு சென்று சாட்சி சொல்லிய வரலாறும் உண்டு.

  சாட்சி சொன்ன கதை

  காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் மதுரையைச்சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கே வாழ்ந்து வந்தான். அப்போது காவிரிபூம்பட்டினத்தில் அவனது தங்கை இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே அவன் காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு தன் தங்கையின் மகளையும் அழைத்து கொண்டு மதுரைக்கு வந்து கொண்டு இருந்தான். வரும் வழியில் இக்கோவிலில் தங்கினான்.

  அப்போது ஒரு பாம்பு கடித்து அவன் இறந்து போனான். உடன் வந்த தங்கை மகள் கதறி அழுதார். அப்போது அந்த வழியாக வந்த திருஞானசம்பந்தர் அவனை மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்து அந்த பெண்ணையும் அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தின் போது அங்கே ஒரு வன்னிமரமும், கிணறும் மட்டுமே சிவலிங்கதோடு இருந்தன. இவற்றை சாட்சியாக கொண்டே திருமணம் நடைபெற்றது.

  பின்னர் மதுரை சென்ற அந்த பெண்ணையும், அவள் கணவனையும் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, உண்மையிலேயே திருமணம் நடந்ததா? என சந்தேகம் கொண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு மன்னன் சபைக்கு வந்தது. மன்னன் திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்டான். சாட்சியாக மனிதர்கள் யாரும் இல்லை. அங்கே திருமணத்தின் போது சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும் தான் சாட்சியாக இருந்தன என்று கூறினாள் இரண்டாவது மனைவி.

  உடனே அவை இங்கே வந்து சாட்சி சொல்லுமா? என்று மூத்த மனைவி கேலியுடன் கேட்டாள். அந்த பெண் நம்பிக்கையுடன் ஈசனை கைகூப்பி தொழுதாள். ‘இறைவா… இது என்ன சோதனை? திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என்னையும் நீ தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

  என்ன ஆச்சரியம், சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும் அங்கே தோன்றி ‘இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான், அதற்கு நாங்களே சாட்சி’ என்று கூறி மறைந்தன. பக்தைக்காக இவ்வாறு சாட்சி சொன்ன காரணத்தால் சாட்சிநாதர் என்ற பெயரையும் ஈசன் பெற்றார்.  இன்றும் இக்கோவிலில் சிவலிங்கத்துடன் வன்னிமரமும், கிணறும் உள்ளது.

  அதுபோல மதுரையில் சுவாமி சன்னிதிக்கு வெளிபிரகாரத்தில் வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவை உள்ளதையும் காணலாம்.

  சாட்சிநாதர் கோவிலின் மகாமண்டபத்திற்கு வெளியே தென்   கிழக்கில் பிரளயங்காத்த பிள்ளையார் கோவில் உள்ளது. இரண்டாம் பிரகாரத்திற்கு வெளியே ஐந்து நிலை கோபுர வாயிலுக்கு கீழ்ப்        புறத்தில் திருக்குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி (அறமுரைத்தநாயனார்) கோவிலும், கீழவீதியில் மேற்கு நோக்கிய மிகப்பெரிய விநாயகர் கோவிலும் உள்ளன. அகத்தியர், புலஸ்தியர், ஜனகர், சனந்தனர், விசுவாமித்திரர் ஆகியோர் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

  குழந்தை வரம்

  துரோணர் இங்கே வந்து ஈசனை வழிபட்ட பின்னரே அஸ்வத்தாமாவை மகனாக பெற்றதாகவும், மகப்பேறின்றி வருந்திய இமயபருவ தராசன் என்ற மன்னன் அகத்திய முனிவர் யோசனைப்படி  இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு பார்வதி தேவியை மகளாக   பெற்றதாகவும் தலபுராணம் கூறுகிறது.

  ஆகவே குழந்தைவரம் கொடுக்கும் இறைவனாக சாட்சிநாதர் அருளாசி புரிகிறார். மேலும் விசுவாமித்திரர் பிரம்ம ரிஷியாக வேண்டியும், சுக்ரீவன் வாலியை வெல்வதற்காகவும் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு நலன் பெற்று உள்ளனர்.

  திருமண வரம் வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தியும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

  நடை திறப்பு

  காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

  திருவிழாக்கள்

  ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. 5–ம் நாள் தன்னைத்தான் அர்ச்சிக்கும் சிறப்பும், 7–ம் நாள் திருக்கல்யாணமும், 8–ம் நாள் சந்திரசேகர் விழாவும், 9–ம் நாள் திருத்தேர்விழாவும், 10–ம் நாள் இறைவன் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

  அமைவிடம்

  தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் திரும்புறம்பயம் ஸ்ரீசாட்சிநாதசுவாமி கோவில் உள்ளது.

  திருவிளையாடல்  புராண வரலாறு

  திருப்புறம்பயம் சாட்சிநாத சுவாமி கோவில் திருவிளை யாடல் புராணத்துடன் தொடர்புடையது. சிவபெருமானின் 64–வது திருவிளையாடலாக வணிக பெண்ணின் திருமண வழக்கில் சிவலிங்கமும், வன்னிமரமும் மதுரை சென்று மன்னர் முன்பு சாட்சி சொன்ன வரலாறு குறிப்பிட்டு உள்ளது.

  அந்த சிவலிங்கமும், வன்னிமரமும் திருப்புறம்பயம் சாட்சி நாத சுவாமி கோவிலை சேர்ந்தவை. இன்றும் இக்கோவிலில் அவற்றை பார்க்கலாம். திருவாலவாயுடையார் திரு    விளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் இந்த வரலாறு கூறப்பட்டு உள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுத பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காணப்படும்,

  வன்னிமரமும் மடைப்புள்ளியுஞ்
  சான்றாக முன்னிறுத்திக்
  காட்டிய மெய்குழலாள்

  என்ற வரிகள் இதை நிரூபிக்கின்றன.

  பிரளயம்  காத்த  விநாயகர்

  முற்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் அழியவில்லை. சுற்றிலும் உள்ள ஊரை ஊருக்குள்ளே புகவிடாமல் விநாயகர் தடுத்து புறத்தே நிறுத்தினார். இதனால் இந்த ஊருக்கு ‘திரும்புறம்பயம்’ என்றும், விநாயகருக்கு ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்றும் பெயர் ஏற்பட்டது.

  இந்த விநாயகப்பெருமானை நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களால் உருவாக்கி பிரதிஷ்டை செய்து பிரளயம் காத்தவிநாயகராக வழிபட்டார் வருண பகவான். சந்தன நிறத்தில் காட்சி தரும் விநாயகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்பெறும் தேனாபிஷேகத்தை தவிர, வேறு எந்த நாளிலும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

  அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகப்பெருமானின் திருமேனியில் உறிஞ்சப்பெறுவது தனி சிறப்பு. இந்த அற்புதகாட்சியை காண அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY