திருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர்

    0
    138

    ற்றாத காசித் தீர்த்தம் கொண்ட தலம், பிரம்மன் தோற்றுவித்த ஆரணி ஆற்றோரம் அமைந்த பஞ்ச பிரம்மத் தலம், ரோம மகரிஷி நிறுவிய சிவன், பாரிஜாத மரத்தின் சாபத்தால் கண்ணன் அரச மரமாகி நின்ற பூமி, மன்னன் மகளையே மணம் புரிந்த இறைவன் வாழும் கோவில், இந்திரனின் சாபம் நீக்கிய தலம் என பல பெருமைகளை தனக்குள் கொண்டு, ஆலயமாக உயர்ந்து நிற்கிறது, திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்.

    பிரம்மன் உருவாக்கிய ஆரணியாற்றில் ஐந்து ஆலயங்கள் தோன்றின. அவற்றில் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தவம் இயற்றினர். அவை பஞ்சபிரம்மத் தலங்கள் எனப் போற்றப்படும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை மற்றும் பழவேற்காடு கோவிலடி ஆகியவை ஆகும்.

    ரோம மகரிஷி, தான் தவமிருக்க தகுந்த இடத்தினைக் காட்டியருளுமாறு பிரம்மனை வேண்டி நின்றார். அதற்கு செவி சாய்த்த பிரம்மன் தன் கையிலிருந்த தர்ப்பையை ஒரு பந்து போல ஆக்கி, அதனை தூக்கி வீசினார். அது உருண்டோடி பிரிந்த இடமே  நதியாக உருவாகி ஆரணி நதி என பெயர் பெற்றது. அதன் கரையோரம் ரோம மகரிஷி தவமியற்றிய இடமே அரியத்துறையாகும். பலநூறு ஆண்டுகள் தவமியற்றிய ரோம மகரிஷிக்கு, இறைவனும் இறைவியும் காட்சி தந்து வரமளித்தனர். அதன் பின் ரோம மகரிஷி அத்தலத்திலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலானார். அது முதல் இறைவன் வரமூர்த்தீஸ்ரர் என அழைக்கப்படுகிறார்.

    காசி தீர்த்தம்

    அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதியரின் ஐந்து புதல்வர்களுள், இளையவர் முகுந்தன் ஆவார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தரிசிக்க விரும்பினார். அப்போது அவர் ரோம மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. முகுந்தன் தனது ஆசையை முனிவரிடம் கூறினார்.

    அதற்கு ரோம மகரிஷி, ‘கங்கைக்கு இணையான மகத்துவம் கொண்ட ஆரணி ஆற்றில் குளித்து, அருகேயுள்ள வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் போதும். உனக்கு காசிக்கு இணையான புண்ணியம் கிட்டும்’ என்றார்.

    முகுந்தனும் அதன்படியே செய்ய, அங்கே சிவபெருமான் காட்சி தந்தார். மேலும் பைரவரும் அவரின் பின்னே கங்கையும் தோன்றினர். அப்போது கங்கையிடம் இருந்து நீர் சுரந்து ஆரணியாற்றில் கலந்தது.

    இந்த அதிசயத்தைக் கண்ட முகுந்தன் ‘அரியத்துறை! அரியத்துறை!’ என கூவி மகிழ்ந்தார். அதுமுதல் இவ்விடம் அரியத்துறை  என்றே வழங்கப்படுகிறது. அரிய என்பதற்கு ‘அரிதான’ என்பதும், துறை என்பதற்கு ‘ஆற்றில் குளிக்கும் இடம்’ என்பதும் பொருளாகும். இதற்குச் சாட்சியாக இந்த கங்கையின் காசித் தீர்த்தம் இன்றளவும் சிவாலயத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதனைக் கவுரவிக்கும் வகையில் தற்போது தனி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் இல்லாத நிலையிலும், ஆற்றின் கரை மீதுள்ள இத்தீர்த்தம் தொடர்ந்து நீரை சுரந்து கொண்டே இருப்பது, அதிசயமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    மரகதவல்லி தோற்றம்

    இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சித்திரசேனன் என்ற மன்னனுக்கு முதலில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, அவைகளும் இறந்து விட்டன. இதனால் மனம் வெறுத்த மன்னன் ஆட்சியை ஒருவரிடம்  ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினான். அப்போது அங்கே நந்தவனத்தில் கொடிகளின் மீது மரகத ஒளி வீசிய  குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் கைகால்களை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

    அதைக் கண்ட சித்திரசேனனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளிவீசும் இக்குழந்தை வரமூர்த்தீஸ்வரரின் கொடையே என மகிழ்ந்தார்.  அக்குழந்தையை இரு கரங்களால் தாங்கி மன மகிழ்ச்சியுடன் தன் அரண்மனை திரும்பினான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்து, அவனையும் குழந்தையையும் வரவேற்றனர். மீண்டும் மன்னர் நல்லாட்சி புரியத் தொடங்கினார். அப்பெண் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

    இறைவனே மணந்தார்

    மரகதவல்லி திருமண வயதை அடைந்தாள். சுயம்வரம் நடத்த அனைத்து மன்னர் களுக்கும் ஓலை அனுப்பினான். சுயம்வரம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒளிவீசும் அழகு பொருந்திய ஆண்மகன் ஒருவன் குதிரையில் வந்து  மரகதவல்லியின் கரம் பற்றி தன் குதிரையில் ஏற்றி தப்பி ஓடினான். உடனே மன்னன் தன் படை வீரர்களை ஏவி அவனைப் பிடிக்க ஆணையிட்டான். ஆனால், எவரும் எவரையும் பிடித்ததாகத் தகவல் இல்லை. மனம் வருந்திய மன்னன்     வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் சென்று  மனமருகி  வேண்டி நின்றான். மக்களும் அவன் பின்னே சென்றனர்.

    அப்போது வானில் மரகதவல்லியோடு, வரமூர்த்தீஸ்வரர் வானில் காட்சி தந்தார். ‘உனக்கு மகப்பேறு தரவே யாம் எம் துணைவியை உனக்கு மகளாக அனுப்பி வைத்தோம். இப்போது இவளுக்கு நீ தந்தை என்ற நிலையை அடைந்து விட்டாய். இனி  இவளை நான் துணையாக ஏற்கின்றேன்’ எனக் கூறினார். மன்னன் உட்பட அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அன்னை மரகதவல்லி யும் அத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்கி வருகின்றார்.

    அரசமரமான கண்ணன்

    பாரிஜாத மரத்தின் சாபத்தால், அரச மரமாக மாறிய கண்ணன், அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. அதற்குச் சாட்சியாக பிரம்மாண்ட அரச மரமும், அதன் அடியில் ரோம மகரிஷியின் சன்னிதியும் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளன. இதனை மூன்று முறை வலம் வருவோருக்கு தோஷமும், சாபமும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    கிழக்கில் சிறிய வாசலும், தெற்கே பெரிய நுழைவு வாசலையும் கொண்டு ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னிதி, தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் யாகசாலை, இதன் எதிரே கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. பஞ்சகோட்டம் கொண்ட கருவறைச் சுவரில், நின்ற நிலையில் விநாயகர், நாகத்தின் தலை மீது முட்டியை வைத்துள்ள அபூர்வ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அதன் கீழ் சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    ஆலய அமைப்பு

    கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இதில் மண்ணால் ஆன சுயம்பு பைரவர் மற்றும் சிலா வடிவ பைரவர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆலயத்தின் தென்புற வாசலில் நுழைந்ததும், எதிரே அன்னை மரகதவல்லி எளிய வடிவில் எழிலான கோலத்தில் அருளாட்சி செய்து வருகின்றாள். அதன் அருகே  நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இதில் அன்னை சிவகாமியுடன் மாணிக்கவாசகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் வடிவங்கள் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருகின்றன. இதுதவிர, திருமணஞ்சேரியின் வடிவத்தை ஒத்த கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளன.

    கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார். அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது.

    திறக்கும் நேரம்

    இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிறப்புமிக்க அரியத்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலம்  அரியத்துறை செல்லலாம். பஸ் வசதி இல்லை என்பதால், கவரைப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும். -பனையபுரம் அதியமான்

    இந்திரன் சாபம் நீங்கிய தலம்

    ந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நெடுநாள் யுத்தம் நடைபெற்றது. முடிவில் இந்திரன் வென்றான். அசுரனின் உடலை வீசியெறிந்தான். அசுரனின் எலும்புத் துண்டுகள், தவம் இயற்றிக்கொண்டிருந்த அகத்தியர் மீது விழுந்து, அவரது தவத்தைக் கலைத்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷ சாபமிட்டார். தன் தவறுக்காக வருந்திய  இந்திரன் சாப விமோசனம் கேட்டான். மனமிரங்கிய அகத்தியர், அரியத்துறை சென்று வரமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வரச் சொன்னார். அதன்படி வணங்கி வழிபட்ட இந்திரனின் சாபம் நீங்கி நலம் பெற்றான்.

    *********************************************************************

    பித்ருதோஷம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்

    முன்னொரு காலத்தில் ரோம மகரிஷி பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் ‘சுவாமி எனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரமே சிவ தரிசனம் கிட்ட ஏதுவாக தவம் செய்ய நல்ல இடம் ஒன்றைக் காட்டுங்கள்’ என்று வேண்டினார். உடனே பிரம்மா, அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து அதைப் பந்து போல உருட்டி பூலோகம் நோக்கி வீசியெறிந்தார். அது பிரம்மாரண்ய நதிக்கரையில் விழுந்தது. அதுதான் இப்போது அரியதுறை என அழைக்கப்படுகிறது. ரோம முனிவர் அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்தார். சிறிது காலத்திலேயே சிவனும் பார்வதியும் முனிவருக்கு காட்சி தந்து வரமளித்தார்கள். ரோம முனிவர் நிர்மாணித்த சிவலிங்கம் தான் இன்று வரமூர்த்தீஸ்வரராக நமக்கு அருள்பாலிக்கிறார்.

    கோயிலின் பக்கத்தில் ஆரணி ஆறு வறண்டு போய் முள் காடாக இருந்தாலும், அந்த ஆற்றங்கரையில் சிறிய கிணறு மாதிரி ஒன்று இருக்கிறது. அதில் யாரும் இறைக்காமலே தண்ணீர் ஊற்றெடுக்கிறது. அதுவும் சுத்தமான நீர். கங்கை நீரை விட புனிதமான நீர்!

    முன் காலத்தில் தென்னக கோயில்களை தரிசித்து விட்டு காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தார் முகுந்த முனிவர். சதி அனுசூயாவுக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்த இவர் அரியதுறைக்கு வந்தார். அவரை வரவேற்ற ரோம மகரிஷியிடம் தான் காசிக்குச் செல்வதாகக் கூறினார். அவரோ, ‘இதற்கு ஏன் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டும். காசியை விட புண்ணியமானது இந்த ஊர். ஆற்றில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் அவரே நேரடியாகக் காட்சி தருவார்’ என்று கூறினார். அவர் சொல்படியே முகுந்தரும் ஆற்றில் நீராடி, இறைவனை வழிபட்டார்.

    ரோமருக்காவது கொஞ்சம் காலம் கழித்து காட்சியளித்த இறைவன் முகுந்த முனிவருக்கு உடனடியாக காட்சியளித்தார். அதுவும் காசியில் அருள்பாலிக்கும் கால பைரவர் உருவத்தில். அவரது தலைச் சடையிலிருந்து நீர் சொட்டி, அது பிரம்மாரண்யத்தில் (தற்போது ஆரணி ஆறு_ கலந்தது. காலபைரவரே அரிய கங்கை நீரை காசியிலிருந்து இங்கு கொண்டு வந்ததால் இந்த ஊருக்கு அரியதுறை என்ற பெயர் ஏற்பட்டது. காலபைரவரின் தலையில் இருந்து கசிந்த கங்கை நீரே இன்றைக்கும் ஆற்றங்கரையிலிருந்து ஊற்றாகச் சுரந்து ஆற்றில் கலக்கிறது. கங்கை நீரை கடவுளே இங்கே கொண்டு வந்ததால் வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பித்ருதோஷம் எனப்படும் முன்னோர்கள் செய்த பிழைகள் எல்லாம் மன்னிக்கப்படும். அந்த காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் சிலை இன்றைக்கும் இங்கே காணக் கிடைக்கிறது.

    கிருஷ்ண பரமாத்மா பூலோகம் கிளம்பும் போது தேவேந்திரன் கொடுத்த பரிசுகளுள் ஒன்று பாரிஜாத மரம். அம்மரத்தின் சிறப்புகளை பாமா, ருக்மணி இருவரிடம் எடுத்துச் சொல்லி அவர்களிருவரையும் அம்மரத்தை கண்ணனிடமிருந்து கேட்டுப் பெறுமாறு நாரதர் தனித்தனியே அவர்களிடம் பேசி சிண்டு முடிந்தார். ஆனால் கிருஷ்ணரோ பாமா ருக்மணி இருவரையும் ஆளுக்கு ஒரு மாதம் பாரிஜாத மரத்தை வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். ஆனால் இதை அறிந்த பாரிஜாத மலர் மிகவும் கோபமுற்று, ‘கிருஷ்ண என் போன்ற மனத்தின் ஆசை உனக்கு எங்கே புரியும். எனவே நீயும் ஆயிரம் ஆண்டுகள் அரசமரமாக இருந்து பார்’ என்று சாபமிட்டுவிட்டது. அதனால் கிருஷ்ண பரமாத்மா ஆயிரம் ஆண்டுகள் இந்த அரியதுறையில் அரசமரமாக இருந்தார். அவரே இன்றைக்கும் மரமாக இருப்பதாக ஐதிகம். இம்மரத்தடியில் ரோம மகரிஷியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சமயம் முன்னோர் செய்த பாவத்தால் பிறந்த ஒரு குரங்கை வேட்டைக்காரன் ஒருவன் துரத்த, அது பயந்து போய் கிருஷ்ண அரச மரத்தைச் சுற்றி ஓடி, பின்னர் களைப்பில் அங்கிருந்த கங்கைநீரையும் கொஞ்சம் குடித்து, கோயிலுக்குள் ஓடி வரமூர்த்தீஸ்வரர் முன் அடைக்கலம் அடைந்தது. இதனால் அதன் பித்ரு தோஷம் மறைந்தது. மறு ஜென்மத்தில் அது காஞ்சி மன்னனாகப் பிறந்து, பூர்வ ஜன்ம ஞாபகத்தால் மண் கோயிலாக இருந்த இக்கோயிலை கற்கோயிலாக எழுப்பியதாக ஆலய வரலாறு சொல்கிறது.

    இந்திரனுக்கும் விருத்ராசுரனுக்கும் நீண்ட நாளாக யுத்தம் நடந்தது. முடிவில் இந்திரன் விருத்ராசுரனைக் கொன்று உடலைத் தூக்கி வீசி எறிந்தான். அவ்வுடல் கடும் தவம் புரிந்து கொண்டிருந்த அகத்திய முனிவரின் தலை மீது விழுந்ததால் முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த இந்திரன் முனிவரை வணங்கி சாபவிமோசனம் கேட்டான். மனமிரங்கிய முனிவர் இந்திரனிடம் அரியதுறை வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் சாபம் நீங்கும் என்று கூறினார். அவ்வாறே இந்திரன் பிரதி வருடம் மார்கழி மாதம் அமாவாசை கழிந்த அஷ்டமி திதியில் வரமூர்த்தீஸ்வரரை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.

    திருவொற்றியூரை ஆண்ட சித்திர சேன மகாராஜா ஒரு நாள் வேட்டையாட காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. குழந்தை இல்லாத தனக்கு இறைவன் அளித்த வரமாக எண்ணி அக்குழந்தைக்கு மரகதவல்லி எனப்பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார். அக்குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது வரமூர்த்தீஸ்வரர் வேடம் கொண்டு மரகதவல்லியை தூக்கி வந்துவிட, ராஜாவும் தன் படையுடன் பின் தொடர்ந்து விரட்டி வந்தார். இவ்வூரில் இறைவன் திருமணக்கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தான். ஆதலால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும் .

    ஆலய கோபுரத்தில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார். உள்ளே, விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சந்நிதிகள் உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் தனிச்சந்நிதியில் காட்சியளிக்கிறார். (எண்ணெய் சாத்திச் சாத்தி கருங்கல் சிலை போல் உள்ளது.) மரகதவல்லி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் சதுர பீடத்தில் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார். சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் தனியே காட்சியளிக்கிறார்.

    இந்த கோயிலில் நவக்கிரஹங்கள் இல்லை. ஆனால் சூரியனும், சந்திரனும் கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளனர். கோயிலின் மேல் கூரையில் பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. இது இக்கோயிலில் வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து நிவர்த்தியாவார்கள் என்பதைக் குறிக்கிறது.

    இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்து, பின்னர் வரமூர்த்தீஸ்வரரை உள்ளன்புடன் வணங்கினால், வாழ்வில் வளம் பெறுவர், பித்ரு தோஷம் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும்.

    சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இவ்வூர். கோயம்பேட்டிலிருந்து நெல்லூர், சூலூர், காளஹஸ்தி, திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறி கவரப்பேட்டையில் இறங்க வேண்டும். அல்லது ர்ம்க் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலயம். ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.

    வழிபாட்டு நேரம் : காலை 7.30 – 12, மாலை 5 – 7.30

     

    download (2)

    தொடர்புக்கு :

    அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோயில்,
    அரியதுறை, கவரப்பேட்டை.

    NO COMMENTS

    LEAVE A REPLY