கபாலி சிறப்பு விமர்சனம்

0
410

வந்துட்டேன்னு சொல்லு…நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது.

அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது…இதோ…

கதைக்களம்

உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வழங்க, ஜாஸ் சினிமாஸ் வாங்கி வெளியிட்டிருக்கும் மிகப் பிரமாண்டபடமே கபாலி.

படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.

மலேசியாவில் தமிழர்கள், பெரும்பாலும் அடிமை நிலையில் வாழ்வதாலும், தமிழனுக்கு தமிழனே வில்லாதி வில்லனாய் மாறிடுவதாலும் அப்பாவி தமிழர்களுக்கு ஒரு மீட்பராக மாறுகிறார் ரஜினி. இதுதான் கபாலி திரைப்படம் மொத்தமும்!

கதைப்படி, இந்தியாவில் தமிழகத்தில் திண்டிவனம் பகுதியில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் சென்று மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக வேலைக்குப் போய் செட்டில் ஆன பரம்பரை கபாலி ரஜினியினுடையது. மலேசியாவில், சீனர்களின் இனவெறியை எதிர்த்து போராடியதற்காகவும், சீனர்களுடன் சேர்ந்து, தமிழர்கள் சிலர் தாங்கள் செய்யும் போதை மருந்து கடத்தலுக்கு எதிரானவர் ரஜினி என்பதாலும் காட்டிக் கொடுத்த பரம்பரையை சார்ந்த சக கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த ரஜினிகாந்த், சிறையில் இருந்து ஆரம்ப காட்சியிலேயே விடுதலையாகிறார்.

அவ்வாறு, விடுதலையான பின்னர், தான் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். என்ன ஆச்சர்யம் இறந்து போனதாக ரஜினி கருதும் அவரது மகள், நிறைமாத கர்ப்பிணி மனைவி…. உள்ளிட்ட உயிர் சொந்தங்கள் ஒவ்வொருவராக கிடைக்க, அவரது மகளையும், மனைவியையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் சூழலில் தள்ளப்பட்டு, மீண்டும் ஒரு தாதாவாக மாறுகிற ரஜினி, தன் பழைய விரோதிகளை துரோகிகளை பழிவாங் கினாரா? இல்லையா….? என்பது தான் கபாலி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

2 மணி நேரம் 30 நிமிடம் 20 நொடிகள் ஓடக்கூடிய யு சான்றிதழ் படம் எனும் சென்சார் சர்டிபிகேட் போட்டு முடிந்ததும், வழக்கமான சமீபகால ரஜினி படங்கள் போலவே பிளாக் பேக் டிராப்பில் புள்ளி புள்ளி ப்ளூ லைட்டிங்கில் சூப்பர் ஸ்டார் எனும் ஆங்கில எழுத்துக்கள் மின்ன சூப்பருக்கும், ஸ்டாருக்குமிடையில் ரஜினி என தமிழில் பளீர் வெள்ளை எழுத்துக்கள் மின்ன, “கபாலி “என தமிழிலும் ஆங்கிலத்திலும் டைட்டில் கார்டு போடும் போதே தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தமும், கரகோஷமும், ஆட்டம் பாட்டமும் விண்ணை பிளக்க எல்லோரிடமும் தொற்றிக் கொள்கிறது உற்சாகம்.

ஓப்பனிங் சீனிலேயே மலேசிய சிறையில் இருந்து மிடுக்காக ரிலீஸ் ஆகும் ரஜினி, ஜான் விஜய் உள்ளிட்ட தன் பட்டாளங்களுடன் நேரே வில்லனைத் தேடி வில்லனின் ரைட் ஹேண்ட் வைத்திருக்கும் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையமான பெட்ஷாப்பிற்கு போகிறார். அங்கு அவரை போட்டுத்தள்ளும் காட்சிகள், அதன்பின்னர் அவர் பேசும் வசனங்கள் சூப்பர்ப்.

கபாலி கதை மொத்தமும் மலேசியாவில் தமிழர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் அரசியல் பற்றியது! என்பதால், இதுவரை தமிழ்நாட்டை காப்பாற்றிய ரஜினி, இப்போது மலேசியாவை சீனார்களின் போதை வலையில் இருந்து காப்பாற்றுகிறார். இதுவரை எல்லா தமிழர்களுக்கும் தலைவராக இருந்தார். இப்போது மலேசியா வாழ் தமிழர்களுக்கு தலைவர் ஆக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் கபாலியில் ரஜினி என்றால் மிகையல்ல.

இதற்கெல்லாம் மேல் இன்னொரு பக்கம் சிதறி கிடக்கும் தன் குடும்பத்தை மீட்க போராடுகிறார் கபாலி ரஜினி. எல்லாவற்றிலும் தன் ஸ்டைல் மேனரிசங்களால் ரசிகனை சீட்டோடு கட்டி போடுவதுபடத்திற்கு பெரும் பலம் .

குமுதவள்ளியாக நிறை மாத கர்ப்பிணியாக, பின் காதோர நரை நடுத்தர வயது பெண்மணியாக ராதிகா ஆப்தே ஹாசம். ரஜினியைப் பார்த்து இவர் பேசும் “உன் கண்ண 2 நிமிஷம் பார்த்து நான் மயங்கிட்டேன் உன் சிரிப்பில் நான் மூழ்கிப் போகிறேன், உன் கருப்பு கலர் அப்படிய எடுத்து என் உடம்பு முழுதும் பூச ஆசை” எனும் காதல்மொழி சிலிரிடச் செய்கிறது ரசிகனை

தன்ஷிகா, மெட்ராஸ் ரித்திகா, அட்டகத்தி தினேஷ் , மெட்ராஸ் கலையரசன், கிஷோர் நாசர், மைம் கோபி உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் நெருப்புடா …, நெஞ்சமெல்லாம் …, வீரத்துறந்திரா ….. உள்ளிட்ட பாடல் கள் படத்தோடு கேட்கும் போது பார்க்கும் போது பெரும் பலம் . முரளியின் ஒளிப்பதிவில் அடிக்கடி காட்டப்படும் அழகிய மலேசியாவின் ஏரியல் வியூவும் ரஜினியின் நடை , உடை , பாவனை ஸ்டைல்களும் பிரமாதம், பிரமாண்டம் .

பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் “காந்தி சட்டையை கழட்டியதற்கும், அம்பேத்கர்கோட்டு போட்டதுக்கும் நிறைய வித்தியாசம் காரணமெல்லாம் இருக்கு”, நம்ம நாட்டுக்காரங்க எங்க போனாலும் ஜாதி , மதம்னு தான் பிரச்சினை பண்றாங்க”…, “நாங்கள்லாம் மெட்ராஸ்காரங்க நம்புங்க… முதல்ல” , “பயத்தவெளியில காட்டிக்க் கூடாது… எதிராளிக்கு நாம பயப்படறது தெரிஞ்சா அது நமக்கு பலவீனம்…” , “மலேசியாவுல சரக்குன்னா பொம்பள மேட்டர்… இங்க சென்னையில் தண்ணிய்யாம்மா….”, “இப்பதாமா நான் வாழுற வாழ்க்கைக்கு முழு அர்த்தம் கிடைச்சுருக்கு…. உள்ளிட்ட பன்ச் டயலாக்குகளும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் சிட்சுவேஷன்களும் பிரமாதம்.

அதேநேரம், மருந்துக்கு கூட காமெடி என்பது படத்தில் எங்கும் இல்லை என்பதும், கபாலி, 2 சீன் சென்னையிலும் 2 சீன் பாண்டிச்சேரியிலும் 2 சீன் தாய்லாந்திலும் படமானது போக முழுக்க மலேசியாவில் படமான தமிழ் படம் என்பதும் பலவீனம்.

ஆக மொத்தத்தில், கபாலி, முன்பாதி ரஜினியின் பழைய காளி, ஜாலி…! பின்பாதி முழுக்க முழுக்க கூலித்தொழிலாளி போராளி!!

க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு சஸ்பென்ஸோடு முடிகிறது.

நடிகர், நடிகைகளின் நடிப்பு

படத்தின் மொத்த பலமே சூப்பர்ஸ்டார் தான். வழக்கமான மாஸ் சீன்கள் மட்டுமல்லாது ரஜினியின் இன்னொரு பக்கமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி எடுத்துள்ளார்.

பழைய கெட்டப்பில் பார்க்கையில் பில்லா பட ரஜினியை நினைவுபடுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் இன்னும் தன்னுடைய அதே ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம் தான் ஞாபகம் வருகிறது., பள்ளி நிகழ்ச்சியில் தான் எப்படி டானாக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும், தனது மகளிடம் பேசும் காட்சியிலும் அசத்துகிறார்.

ஜான் விஜய் ரஜினியின் நண்பராக வருகிறார். உடன் வரும் அட்டக்கத்தி தினேஷும் தன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். தன்ஷிகா பில்லா நயன்தாரா மாதிரியான ஸ்டைலான பெண்ணாக வருகிறார். சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார்.

ரித்விகாவின் கதாபாத்திரம் பாராட்டும்படியாக உள்ளது. சூப்பர்ஸ்டாரை எதிர்த்து பேசும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார். ராதிகா ஆப்தே தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாகவும், சூப்பர்ஸ்டாரின் மனைவியாகவும் வருகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ரஜினியுடனான காதல்காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

வில்லனாக கிஷோர், லிங்கேஷ் ஆகியோர் வந்தாலும் முக்கிய வில்லனான வின்ஸ்டன் சா அசத்துகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

ரஞ்சித் சூப்பர்ஸ்டாரை தன்னுடைய கதைக்கேற்ப முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய வழக்கமான பல சிம்பாளிக் காட்சிகளை வைத்துள்ளார். வசனங்களில் அசத்தியுள்ளார். ரஜினியின் படமாக மட்டுமல்லாமல் ரஞ்சித் படமாகவும் மாற்றியிருக்கிறார்.

படத்தின் பல காட்சிகள் செட் ஒர்க் தான் என்றாலும் தெரியாத அளவுக்கு மலேசிய, தாய்லாந்து தெருக்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலைஇயக்குனர் ராமலிங்கம். எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளனர் இரட்டையர்களான அன்பறிவ். இரண்டரை மணி நேரத்துக்கேற்றபடி விறுவிறுப்பாக கதையை கட் செய்துள்ளார் பிரவீண் கே.எல்

கிளாப்ஸ்

ரசிகர்கள் விரும்பும் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், நாசர் காட்சிகள், ரஜினி யாரை நம்புவது என்ற சஸ்பென்ஸ் காட்சிகள்

ரசிக்க வைக்கும் படத்தின் வசனம், சூப்பர்ஸ்டார் மட்டுமல்லாமல் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பு, மிரட்டும் பின்னணி இசை

பல்ப்ஸ்

ஒரு கேங்ஸ்டர் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சண்டை குறைவு தான்.

மொத்தத்தில் கபாலி முந்தைய படங்களின் தோல்வியை உடைத்தெறிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

ரேட்டிங்- 4.5/5

NO COMMENTS

LEAVE A REPLY