நல்ல இடத்தில் தானம் வாங்கு!

0
169

ஒரு சீடனின் கனவில் 15 வயது பெண் தோன்றி, என்னைக் காப்பாற்றுங்கள், என அலறுவதைக் கண்டான். ஒருநாள் இரண்டு நாள் அல்ல…ஐந்தாறு  நாட்களாக கனவு தொடர்ந்தது. சீடனுக்குப் பயம். தன் குருவிடம், குருவே! எனக்கு இப்படி ஒரு கனவு ஐந்தாறு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இதன்  பொருளைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே! என வருத்தத்துடன் கேட்டான். சிஷ்யா! நன்றாக நினைவுபடுத்தி பார். இந்த கனவு முதலில் வந்த நாளிலோ, அதற்கு முந்தைய நாட்களிலோ நீ எங்கே சென்றாய்? என்றார்.

சீடன் சற்றே யோசித்து விட்டு, கனவு வந்ததற்கு முதல்நாள், ஒரு ஏழை அளித்த அன்னதானத்தில்  பங்கேற்றேன், என்றான். அவன் எதற்காக தானம் தந்தான் தெரியுமா?  என்றார். தெரியாதே, என்ற சீடனிடம் அதுபற்றி விசாரித்து வா,என்றார் குரு.

சீடனும் அதுபற்றி தானமளித்தவரின் உறவுக்கார இளைஞனிடம் விசாரித்தான். சுவாமி! அன்னதானம் அளித்தவர் என் தாய்மாமன் தான். நானும், என் மாமன் மகளும் ஒருவரை ஒருவர் விரும்பினோம்.

நான் ஏழை என்பதால் எனக்கு பெண்ணைத் தர மாமா மறுத்து விட்டார். மேலும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு 60 வயது கிழவனிடம், லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அவளைக் கட்டிக்கொடுக்க முன் வந்துள்ளார். அந்த பாவம் கரைய தானம் கொடுத்தார், என்றான். அதிர்ச்சியடைந்த சீடன்,  எவ்வளவு தானம் கொடுத்தாலும், பெற்ற மகளை பணத்துக்காக விற்க நினைப்பது பெரும் பாவம் என தானம் அளித்தவரிடம் எடுத்துரைத்தான்.

அவரும் மனம் திருந்தினார். தன் மகளை முறைமாப்பிள்ளைக்கே கட்டி வைக்க சம்மதித்தார். சீடன் ஊர் திரும்பி துறவியிடம் நடந்ததைச் சொன்னான்.  தகுதியில்லாதவனிடம் தானம் பெறுவது  பெரும்பாவம் என்பதை இப்போதாவது உணர்ந்தாயா? என்றார் குரு.

NO COMMENTS

LEAVE A REPLY