செல்வ வளம் தரும் அட்சய திரிதியை

  0
  127

  செல்வ வளம் தரும் அட்சய திரிதியை
  “அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள்.முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  அட்சய திரிதியை 
  அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லக்ஷ்மி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் எந்த இல்லங்களில் இருக்கிறாள் எந்த பொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால் தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள் என்பது நம்பிக்கை ஆகும்.

  லட்சுமி வாசம் செய்யும் இடம்

  சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வீட்டை சுத்தம் செய்து எப்பொழுதும் தூய்மையாகவும் கோலமிட்டும், தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனரோ அங்கே ஸ்ரீதேவியின் வாசம் நிரந்தரமாக இருக்கும். சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் திருமகள் நீங்காது இருப்பாள்.

  மகாலட்சுமி பூஜை

  வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து, குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து வாசனை மலர்களால் தங்களுக்கு தெரிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்கி பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து நம் இல்லம் வருவாள்.

  ஏழைகளுக்கு தானம்

  இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்ன வென்றால் பெரியோர்களையும் முன்னோர்களையும் வணங்குவது தான். அட்சய திருதியை அன்றைய தினம் பசித்தோருக்கு உணவு வழங்குதல் இல்லாதவர்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாதசெல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்.

  என்ன தானம் கொடுக்கலாம்

  இறைவனை வழிபடுவதோடு அன்று செய்யும் தானங்கள் அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், அரிசி, தண்ணீர் பாத்திரம், உணவு பொருட்கள், வஸ்திரம், பசு இப்படி தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம்.அக்ஷய திருதியை தினத்தை “நல்லுதவி தினமாக ” கொண்டாடலாம் இது நம் முன்னோருக்கு செய்யும் நன்றியாகும்.

  பரசுராமர் அவதாரம்

  அட்சய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மணிமேகலைக்கு இந்நாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனால் அன்று முதல்மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்.

  சந்திரன் சாப நிவர்த்தி

  சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் அக்ஷய திருதியை தினத்தன்று அட்சய சாப நிவர்த்தி பெற்று அட்சய திரிதியை தினத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கினார். இதை வைத்துப் பார்க்கையில் அட்சய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் எல்லாம் வளர்பிறை போல வளரும்.

  தங்கம் மட்டுமல்ல

  அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது தற்போது பழக்கமாகி விட்டது. தங்கள் பொருளாதார நிலைக்கு தக்கவாறு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறப்பு. குறைந்த பட்சம் உணவு பொருட்களையாவது வாங்குவது சிறப்பு. அரிசி, உப்பு வாங்கினாலும் சிறப்பானதுதான்.

  அட்சய திருதியில் வாங்கவேண்டிய பொருட்களும், பலன்களும்..
  அட்சய திருதியை நன்னாளில் வாங்கவேண்டிய பொருட்களும், அதன் பலன்களும் பின்வருமாறு –

  தங்கம்:
  கடன் தொல்லை தீரும். குடும்பம் தன்னிறைவும் சுபீட்சமும் பெற வழி உண்டாகும்.

  வெள்ளி:
  உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடலாம். இதனால் மன அமைதி ஏற்படும்.

  அரிசி:
  நம்மிடம் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழை-எளியவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்.

  நெய்:
  குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

  வெண்ணை:
  நினைவுத்திறன் மேம்படும்.

  வெள்ளை சட்டை:
  மனதில் குதூகலம் பிறக்கும்.

  உப்பு:
  வீட்டுக்கு தேவையான சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

  சர்க்கரை:
  கணவன்-மனைவி பாசம் அதிகரிக்கும்.

  பருப்பு:
  குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

  பூக்கள்:
  குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

  மின்சாதனபொருட்கள்:
  குறுகிய காலத்தில் ஏழ்மை விலகும்.

  அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
  அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள் …
  1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
  2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு ‘அட்சய திருதியை’ நாளில் செய்யப்படு கிறது.
  3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
  4. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  5.. அன்னதானம் செய்வதும்,
  6. கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
  7. பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
  8. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.
  9. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
  10. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

  NO COMMENTS

  LEAVE A REPLY